தமிழகத்தில் தேர்தல் என்றால், கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி இறைப்பது வாடிக்கையாகி விட்டது. ஜனநாயகத்தை, பணநாயகத்தால் வெல்ல முடியும் என்பது, திருமங்கலம் இடைத்தேர்தலின் போது, தி.மு.க.,வால், உறுதிபடுத்தப்பட்டது. அந்த தேர்தலில், தி.மு.க., கோடி கோடியாக பணத்தைக் கொட்டியது. இதற்கு நல்ல பலன் கிடைத்ததால், அதைத் தொடர்ந்து நடந்த, மதுரை மேற்கு, மதுரை மத்திய தொகுதிகளில், இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது. அதன் மூலம், தி.மு.க., அடுத்தடுத்து வெற்றிகளையும் ஈட்டியது.சட்டசபை தேர்தலிலும், இந்த நடைமுறையை பின்பற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால், தேர்தல் கமிஷன் இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. எப்போதும் இல்லாத வகையில், தேர்தல் செலவு கணக்குகளை பார்வையிட, மத்திய கலால் துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளின் கீழ் பறக்கும் படை, வீடியோ குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழு, சுற்றிச் சுற்றி வந்ததன் மூலம், பண பட்டுவாடா ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இந்த கிடுக்கிப்பிடிகளை எல்லாம் மீறி, தமிழகம் முழுவதும், பல வழிகளில், தி.மு.க., தாராளமாக பணத்தை செலவு செய்தது. ஒரு தொகுதிக்கு, கட்சி சார்பில் மூன்று கோடி ரூபாயும், வேட்பாளர்கள் சார்பில் பல கோடி ரூபாய் என, பட்டுவாடாவும் நடந்தது."அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தையா தருகின்றனர்... நம்மிடமிருந்து எடுத்த பணத்தைத் தானே திருப்பித் தருகின்றனர்...' என்ற எண்ணத்தை, பல அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் மக்கள் மனதில் விதைத்ததால், வேட்பாளர் கொடுத்த பணத்தை மறுக்காமல் வாங்கிக் கொண்ட மக்கள், பணத்துக்கு, "பட்டை நாமம்' போட்டுவிட்டு, தங்களின் விருப்பப்படியே ஓட்டுப் போட்டதன் மூலம், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்தை பணநாயகத்தால் ஜெயிக்க முடியும் என்ற எண்ணம், இந்த தேர்தல் மூலம் தவிடுபொடியாக்கப் பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக