சனி, 23 ஜூலை, 2011

சம்பாத்தியம்

கடந்த 2010ம் ஆண்டில், தாய்நாட்டிற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய தொகை ரூ.2.53 லட்சம் கோடி

ஜூலை 24,2011,02:50
சென்னை:வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது கடந்த 7 ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகில், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புவோரில் இந்தியர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.உலகில், 190 நாடுகளில், 2கோடியே 70 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பல்வேறு பணிகளில் ஈடுபட்டு, திரட்டும் வருவாயில், குறிப்பிடத்தக்க தொகையை, இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தாருக்கு அனுப்புகின்றனர்.இந்தியாவில்கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில்வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக, கேரளாவில் இருந்து பணி வாய்ப்புதேடி அரபு நாடுகளுக்கு செல்கின்றவர்கள், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புகின்றனர்.அதுபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா,பிரான்ஸ் நாடுகளுக்கு செல்லும் பஞ்சாபியர்களும், அதிகத் தொகையை தாயகத்திற்கு அனுப்பி வருகின்றனர். இவ்வாறு உலகில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பும் தொகை கடந்த 8 ஆண்டுகளில் 162 சதவீதம் உயர்ந்துள்ளதாக, உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டுவெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு 2,100கோடி டாலர் அனுப்பி இருந்தனர். இது, சென்ற 2010ம் ஆண்டு 5,500கோடி டாலராக (2 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.உலகில், இந்தியர்களைப்போல், எந்த ஒரு வெளிநாட்டவரும், தங்கள் தாயகத்திற்கு இந்த அளவிற்கு பணம் அனுப்பியதில்லை.எனவே, வெளிநாடுகளில் வசிக்கும் அயல்நாட்டவர், தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளதாக, உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 8 ஆண்டுகளில் (2009ம் ஆண்டு நீங்கலாக), வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004ம் ஆண்டு, வெளிநாடு வாழ்இந்தியர்கள், இந்தியாவிற்கு அனுப்பிய தொகை, 1,875கோடி டாலராக இருந்தது. இது, 2005ம் ஆண்டு 2,212கோடி டாலராகவும், 2006ம் ஆண்டு 2,833கோடி டாலர் என்ற அளவிலும்அதிகரித்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு, வெளிநாடு வாழ் இந்தி யர்கள், தாயகத்திற்கு 3,721கோடி டாலர் அனுப்பியுள்ளனர். இது, 2008ம் ஆண்டு 4,994கோடி டாலராகவும், 2009ம் ஆண்டு 4,925கோடி டாலர் என்ற அளவிலும்உயர்ந்துள்ளது. 2008 ஆண்டு, உலக பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால், 2009ம் ஆண்டு இந்தியர்கள் அனுப்பிய தொகை சற்றே குறைந்தது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம், அவர்களின் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரவளர்ச்சிக்கும் மறைமுகமாக உதவுகிறது. இந்தியாவில் ரியல் எஸ்டேட், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அயல் நாட்டு இந்தியர்களின் முதலீடு குவிந்து வருகிறது.அதனால், வெளிநாடுகளில் பணியாற்றி விட்டு, இந்தியா திரும்பு வோரின் உடமைகளை பாதுகாக்கவும், ஆதரவளிக்கவும்தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசி யம்.'இத்தகையோருக்கு வழி காட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டது தான், 'ரிடர்ன் டுஇந்தியா டாட் காம்' இணைய தளம்' என்கிறார் எனர்கேட்நிறுவன தலைமை செயல்அதிகாரி ரகு ராஜகோபால்.இந்த இணையதளம், அமெரிக்காவில் இருந்து திரும்புவோரின் உடைமைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்துசேர்ப்பது முதல், பணிவாய்ப்பு, குடியிருப்பு உள்ளிட்ட அனைத்துவசதிகள் வரை செய்து தருகிறது.இதனால், இந்தியா திரும்புவோர், எவ்வித சிரமமுன்றி தாயகத் தில் வாழலாம் என்கிறார் ரகு ராஜகோபால்.வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாய்நாடு திரும்புவதாக கூறப்படுகிறது. அதே சமயம், இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 6 முதல் 8 லட்சம்பேர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.உலகளவில், சீனர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சீனா, ஹாங்காங்,தைவான் ஆகிய நாடுகளைச்சேர்ந்த 3கோடியே 50 லட்சம்பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதனால், வெளிநாடு வாழ் அன்னியர் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையில் ஹாங்காங்,தைவான் நாடுகளைசேர்க்கக் கூடாது என்று புள்ளியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அவ்வாறுசேர்த்தால், இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்த்து ஒன்றுபட்ட இந்தியாவாக கணக்கிடவேண்டும். இந்த கணக்கீட்டின் படி, அயல் நாடுகளில் வாழ்வோர் பட்டிய லில், இந்தியா முதலிடத்தை பெறும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாவது இடத்தில் சீனாகடந்த 2010ம் ஆண்டு, தாயகத்திற்கு அதிக தொகை அனுப்பியநாட்டவரில் சீனர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.வெளிநாடு வாழ்சீனர்கள், தங்கள் நாட்டிற்கு 5,100கோடி டாலர், அனுப்பி யுள்ளனர்.அடுத்த இடங்களில், மெக்சிகோ (2,260கோடி டாலர்),பிலிப்பைன்ஸ் (2,130கோடி டாலர்), பிரான்ஸ் (1,590 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன(நன்றி.தினமலர்)

வெள்ளி, 15 ஜூலை, 2011

வியப்பு

அற்புதம் உலகில் இது ஒன்று தான்

மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.

இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இptஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார், அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.

கிணற்றின் அளவு

இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.

எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.

எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருதுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருதுகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.

பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை(நன்றி.அன்போடு உங்களை...)

வியாழன், 14 ஜூலை, 2011

ஏரி

வீராணம் நீர்மட்டம் கோடையில் 'கிடுகிடு'

General India news in detail
சிதம்பரம் :

சென்னைக்கு தடையின்றி குடிநீர் அனுப்புவதற்காக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் விவசாயிகளின் உயிர் நாடியாக வீராணம் ஏரி உள்ளது. 2005ம் ஆண்டு முதல் சென்னை மக்களின் தாகத்தை தணிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுவதால், கோடை காலத்திலும் வீராணத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

கடந்த ஜனவரி மாத இறுதியில் ஒரு வாரம், கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் நிரப்பப்பட்டது. ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 900 மில்லியன் கன அடி வரை தண்ணீர் நிரப்பப்பட்டது. வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருவதால், படிப்படியாக நீர்மட்டம் குறைந்தது. அதனால், கடந்த நான்கு நாட்களாக கீழணையில் இருந்து வடவாறு வழியாக கோடையிலும் இரண்டாவது முறையாக வீராணத்திற்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், வெகுவாகக் குறைந்திருந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது படிப்படியாக உயர்ந்து நேற்றைய நிலவரப்படி 750 மில்லியன் கன அடியைத் தொட்டது

வியாழன், 7 ஜூலை, 2011

அறிவுரை

பெற்றோர்களின் கவனத்திற்கு.....
மனவியலில் Superego Lacunae என்ற சொல் இருக்கிறது. இதற்கு தமிழில் அப்படியே பொருள் கூற முடிவது சுலபமல்ல என்றாலும் பொதுவாக ‘மனசாட்சியின் ஓட்டைகள்’ என்பதாகப் பொருள் கூறலாம். தங்கள் பிள்ளைகளின் தவறுகளையும், தவறான நடத்தைகளையும் கண்டும் காணாதது போல் இருக்கும் பெற்றோர்களின் நடவடிக்கையைச் சுட்டிக் காட்டுவதற்காக இச்சொல் அதிகம் மனோதத்துவ நிபுணர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய பெற்றோர்களுக்கு ஏராளமான வேலைகள் இருக்கின்றன. ஒரு நாளுக்கு 24 மணி நேரம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. வீட்டுச் செலவை சமாளிக்க பெரும்பாலும் இரண்டு பேருமே வேலைக்குப் போக வேண்டியதாகக் கூட இருக்கிறது. இப்படி நேரம் போதாத அவசர வாழ்க்கையில் குழந்தைகளை அதிகம் கவனிக்க அவர்களால் முடிவதில்லை. அதனாலேயே அவர்கள் குழந்தைகளைக் கவனிக்கத் தவறுபவர்களாக இருக்கலாம். அதனை superego Lacunae வகையில் சேர்க்க முடியாது. ஆனால் அந்தக் கவனக்குறைவுகளுக்கு அவர்கள் தரும் விலை மிக அதிகம். உதாரணத்திற்கு இரண்டு உண்மை சம்பவங்களைப் பார்க்கலாம்.

ஒரு வீட்டில் தங்கள் ஒரே மகனுக்கு ‘பாக்கெட் மணி’ என்ற பெயரில் நிறைய பணம் தரும் பழக்கம் இருந்தது. அவன் கல்லூரிக்குச் சென்றதும் அளவுக்கும் அதிகமாகவே பெற்றோரிடம் பணத்தைக் கேட்டுப் பெற ஆரம்பித்தான். அந்தப் பணம் எப்படி செலவாகிறது என்பதை அறிய பெற்றோரில் ஒருவராவது மெனக்கெட்டிருந்தால் மகன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக ஆரம்பித்திருக்கிறான் என்பது சுலபமாகப் புரிந்திருக்கும். வேறு சில சின்னச் சின்ன வித்தியாசங்களும் அவன் நடவடிக்கைகளில் தெரிய ஆரம்பித்திருந்தன. பெற்றோர் அதைக் கவனித்தாலும் ’வயதுக் கோளாறு’ என்று அலட்சியமாக இருந்து விட்டனர். முடிவில் எல்லாம் கைவிட்டுப் போன பிறகு தான் ஒரு நாள் அவர்கள் அறிய நேர்ந்தது. இன்று அந்த இளைஞன் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறான். பெற்றோர் அவன் குணமாகி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டாத தெய்வமில்லை.

இன்னொரு குடும்பத்தில் ஒரு கல்லூரியில் படிக்கும் பெண் தனக்கு எந்த விதத்திலும் தகுதியில்லாத கீழ்த்தரமான ஒரு இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்திருந்தாள். கல்லூரியில் இருந்து வரும் வழக்கமான நேரத்திலிருந்து மிக காலந்தாழ்ந்து வருதல், வீட்டில் இருக்கும் சமயங்களிலும் எப்போதும் செல்போனில் மணிக்கணக்கில் பேசுதல், பெற்றோர் அருகில் வரும் போது குரலைத் தாழ்த்துதல் அல்லது செயற்கைத் தனமாக எதாவது பேசுதல் போன்ற நிகழ்வுகள் அந்த வீட்டில் நடக்க ஆரம்பித்தன. அந்த இளைஞனுடன் சுற்றுவதில் அவள் பரிட்சைக்குக் கூட செல்லவில்லை. போனில் அவள் தோழியுடன் பேசுகிறாள் என்று எண்ணி ‘இந்த காலத்தில் செல்ஃபோனில் நேரம் காலம் தெரியாமல் பேசுவதே வாடிக்கையாகப் போகி விட்டது’ என்று பெற்றோர் பொதுப்படையாக நினைத்து விட்டு விட்டனர். வர வேண்டிய நேரத்திற்கு வராமல் கால தாமதமாக வந்ததற்கு மகள் சொன்ன சாக்கு போக்குகளில் திருப்தி அடைந்து விட்டனர். அவர்கள் அலட்சியப்படுத்தாமல் கவனித்து காரணத்தைத் தேடி இருந்தால் கண்டிப்பாக உண்மை நிலவரம் தெரிந்திருக்கும். கடைசியில் ஒரு நாள் மாலையும் கழுத்துமாக வந்த பின் தான் அவர்கள் உண்மையை உணர்ந்தனர். காதல் திருமணத்தில் தப்பில்லை. ஆனால் ஆறே மாதத்தில் கணவனின் உண்மைக் குணங்கள் அறிந்து சகிக்க முடியாமல் மகள் தாய் வீட்டுக்குத் திரும்பி வந்த போது அவர்கள் துக்கம் சொல்லி மாளாது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் பெற்றோர் மாறுதல்களைக் காண ஆரம்பித்த போதே விழித்துக் கொண்டிருந்தால் இரண்டு பேருடைய வாழ்க்கையையும் மேலும் சீரழியாமல் திசை திருப்பி இருக்கலாம். இதில் அவர்கள் வேண்டுமென்றே கண்டும் காணாதிருந்தார்கள் என்று கூற முடியாது. போதிய கவனம் தராமல் இருந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

இனி superego Lacunae என்ற மனோதத்துவ கலைச் சொல்லிற்குப் பொருத்தமான வேறு இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.

அந்த வீட்டில் பெற்றோருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். ஒரே மகன் என்பதற்காக மகனைப் பெற்றோர் மிகச் செல்லமாக வளர்த்தனர். அவன் என்ன குறும்பு செய்தாலும் அவர்கள் அவனைத் திட்ட மாட்டார்கள். அவன் சகோதரிகளுடன் சண்டை போட்டு அவர்கள் அவனை அடித்து விட்டால் அந்தப் பெண்களுக்குத் தான் தண்டனை. பக்கத்து ஓட்டலில் அந்த மகனுக்குத் தனியாக ஒரு கணக்கு ஏற்படுத்தி அவன் எப்போது என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ள வசதி ஏற்படுத்தித் தந்தனர். அந்த சிறுமிகள் வீட்டில் பழைய சோறு சாப்பிடும் போது அந்த சிறுவன் அந்த ஓட்டலுக்குச் சென்று சுடச் சுட பிடித்ததைச் சாப்பிடுவான். சில சமயம் அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வந்து சகோதரிகளுக்கு முன்பே அவர்களுக்குத் தராமல் அவன் அதை சாப்பிடுவதும் உண்டு. அந்த சிறுவன் வளர்ந்து பெரியவனான பின் சிறிதும் பொறுப்பில்லாமல் குடிகாரனாக மாறி அந்தப் பெற்றோர் சேர்த்து வைத்திருந்த சொத்தை எல்லாம் அழித்து உருப்படாமல் போனான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இன்னொரு குடும்பத்தில் தங்கள் ஒரே மகன் மீது அவனது பெற்றோருக்கு அளவு கடந்த பாசம் இருந்தது. அவன் மிக நன்றாகப் படித்து வகுப்பில் முதல் மாணவனாகவே என்றும் இருந்ததால் அவனைக் குறித்து அவர்களுக்கு அளவு கடந்த பெருமிதம். படிப்பில் சுட்டியாக இருந்த அவனிடம் சிறு வயதிலேயே தலைக்கனம் அதிகம் இருந்தது. அவன் தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களை எல்லாம் எடுத்தெறிந்து பேசுவான். அக்கம் பக்கத்தில் உள்ளோரிடமும் அப்படியே நடந்து கொண்டான். அப்போதெல்லாம் அந்தப் பெற்றோர் அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். யாராவது அந்தப் பெற்றோரிடம் அவன் நடத்தை குறித்து அதிருப்தி தெரிவித்தால் “நீங்கள் ஏன் அவனிடம் வம்புக்குப் போகிறீர்கள்?” என்று அவர்களிடமே திருப்பிக் கேட்பார்கள். பெரியவனான பிறகு அவன் பெற்றோரிடம் கூட அப்படியே நடந்து கொள்ள ஆரம்பித்தான். பெர்றோரின் வயதான காலத்தில் “பணம் ஏதாவது தேவைப்பட்டால் கேளுங்கள். கூடவே இருந்து என் உயிரை வாங்காதீர்கள்” என்று சொல்லி பெற்றோரை கூட வைத்துக் கொள்ள மறுத்து விட்டான்.

இந்த இரண்டு குடும்பத்திலும் அவர்கள் தங்கள் மகன்களின் குணாதிசயங்கள் தவறாகப் போகும் போதெல்லாம் கண்டும் காணாமல் இருந்தார்கள். வளரும் காலத்தில் கண்டு கொள்ளப்படாத தவறுகளை வளர்ந்த பின்னர் திருத்துவது சுலபமல்ல. எதையெல்லாம் குழந்தைகளிடத்தில் விதைக்கிறோமோ அதையெல்லாம் வயதான காலத்தில் அறுவடை செய்ய வேண்டி வரும் என்பதை பெற்றோர்கள் மறந்து விடக்கூடாது. களைகள் காணப்பட்டால் சிறு வயதிலேயே பிடுங்கி எறிவது தான் முறை. அது தான் சுலபம். கண்டும் காணாமலும் போனால் அறுவடைக் காலம் அழ வேண்டிய காலமாக மாறி விடும் என்பது உறுதி.

முதல் இரண்டு உதாரணங்களில் பெற்றோர் போதுமான கவனம் செலுத்தாமல் விட்டு விட்டனர். கடைசி இரண்டு உதாரணங்களில் பிள்ளைகள் செய்வதெல்லாம் அழகு என்று பெற்றோர் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தொட்டால் தீயின் குணம் சுடுவது தான்.

எனவே பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் வளரும் போது நற்குணங்களுடன் வளர்கின்றனரா, புத்திசாலித்தனமாக வளர்கின்றனரா என்பதை கண்காணிக்க மறந்து விடாதீர்கள். சிறு சிறு தவறுகள் கண்டால் அவ்வப்போது திருத்துங்கள். அப்போது சின்னவர்கள் தானே என்று சகித்துக் கொள்ள நினைக்காதீர்கள். சிறு வயதில் அவர்களுடைய பண்புகள் நல்லதாக இருந்து ஆழப்பட்டால் மட்டுமே அவர்கள் வளர்ந்த பின்னால் உங்களுக்குப் பெருமை சேர்க்கிற விதத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த மதிப்பீடுகளை அவர்களுடைய சிறு வயதில் சொல்லித் தருகிறீர்களோ அந்த மதிப்பீடுகளின் படியே அவர்கள் மற்றவர்களிடம் மட்டுமல்ல உங்களிடமும் நடந்து கொள்வார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்குமானால் அந்த மதிப்பீடுகளின் தரம் உயர்ந்ததாக இருக்கும்படியே நீங்கள் கண்டிப்பாக பார்த்துக் கொள்வீர்கள்.

வெள்ளி, 1 ஜூலை, 2011