புதன், 25 மே, 2011

அழுகை

கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது

உலகம் முழுவதும் பெண்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஆம். பெண்கள் அழுவதற்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது ஆண்களே.

லண்டனில் கண் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் சார்பில் 2,000 ஆண், பெண்களிடம் (அழுகை வரும் அளவுக்கு) ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தங்களை அழ விடுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக 4ல் 1 பெண் தெரிவித்தார். அதிலும், ஒருவர்கூட தனது அப்பா, மகனை காரணமாக கூறவில்லை! ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு… கணவன் அல்லது காதலன் மீதுதான். மனைவியோ, காதலியோ… அழ விட்டுப் பார்ப்பதில் ஆணுக்கு தனி ஆர்வம் இருப்பதாக வெடித்தனர் பெண்கள்.

ஆய்வின்படி, மனைவி, காதலி மட்டுமின்றி தாயைக் கூட அழவிடும் ஆண்கள் 63 சதவீதம் என்று தெரிய வந்தது. இப்படிச் செய்யும் ஆண்கள் தப்பி விட முடியுமா என்ன…? அவர்கள் ஆபீசில் பாஸ் கடிக்கும்போதும், வேலையைச் சுமத்தும்போதும் அழுகின்றனராம். இங்கிலாந்து பெண்களில் 32 சதவீதத்தினரும், ஆண்கள் 22 சதவீதத்தினரும் வேலையில் மனஅழுத்தம், பிரச்னையால் கண்ணீர் விட்டுக் கதறுகின்றனர்.

கடந்த 6 மாதங்களில் ஒருமுறையாவது அழுததாக ஆய்வில் பங்கேற்ற பலர் தெரிவித்தனர். எனினும், அலுவலக பிரச்னைகள், டென்ஷனால் கண்ணீர் விட்டு அழும் ஆண்கள் குறைவே. மற்றபடி மனதுக்குள் அழுதாலும், பெண்களால் என்ன பிரச்னை வந்தாலும் மனதுக்குள் கூட அழுவதில்லை. ஸ்டிராங்காக எதிர்கொள்கின்றனர். மாறாக, பெண்களை டென்ஷனாக்கி அழ விடுகின்றனர் என்கிறார் ஆய்வு நடத்திய டாக்டர் சாரா ப்ரூவர்.

அழுவது சோகமானதுதான் என்றாலும், கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது என்கிறார் அவர்.நவீன உலகில் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன் கழிக்கிறோம். அதனால், கண்கள் காய்ந்து ஈரத்தன்மையை இழக்கின்றன. கண்ணீர் வெளியானால் கண்கள் சுத்தமாகும் என்றார் சாரா.

சாரே… பொஞ்சாதி, கேர்ள் பிரண்ட அழ விடுறதே அவங்க கண்கள் நல்லா இருக்கணுங்கற நல்ல நோக்கத்துலதான்னு அவங்க புரிஞ்சிக்கணும் தானே சாரே… என்கிறார் தினமும் மனைவியை அழ விடும் ஒரு கணவர்

சனி, 14 மே, 2011

பணத்திற்கு பட்டை நாமம் போட்ட வாக்காளர்கள்

election 2011  பணத்துக்கு பட்டை நாமம் போட்ட வாக்காளர்கள்
A+ A-
தேர்தல் கமிஷனின் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளையும் மீறி, தமிழகத்தில் பண பட்டுவாடா நடந்தாலும், அதையும் வாங்கி, பணத்துக்கு, "பட்டை நாமம்' போட்டுவிட்டு, தாங்கள் நினைத்தவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போட்டு, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் என்றால், கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி இறைப்பது வாடிக்கையாகி விட்டது. ஜனநாயகத்தை, பணநாயகத்தால் வெல்ல முடியும் என்பது, திருமங்கலம் இடைத்தேர்தலின் போது, தி.மு.க.,வால், உறுதிபடுத்தப்பட்டது. அந்த தேர்தலில், தி.மு.க., கோடி கோடியாக பணத்தைக் கொட்டியது. இதற்கு நல்ல பலன் கிடைத்ததால், அதைத் தொடர்ந்து நடந்த, மதுரை மேற்கு, மதுரை மத்திய தொகுதிகளில், இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது. அதன் மூலம், தி.மு.க., அடுத்தடுத்து வெற்றிகளையும் ஈட்டியது.சட்டசபை தேர்தலிலும், இந்த நடைமுறையை பின்பற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால், தேர்தல் கமிஷன் இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. எப்போதும் இல்லாத வகையில், தேர்தல் செலவு கணக்குகளை பார்வையிட, மத்திய கலால் துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளின் கீழ் பறக்கும் படை, வீடியோ குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழு, சுற்றிச் சுற்றி வந்ததன் மூலம், பண பட்டுவாடா ஓரளவு கட்டுக்குள் வந்தது.

இந்த கிடுக்கிப்பிடிகளை எல்லாம் மீறி, தமிழகம் முழுவதும், பல வழிகளில், தி.மு.க., தாராளமாக பணத்தை செலவு செய்தது. ஒரு தொகுதிக்கு, கட்சி சார்பில் மூன்று கோடி ரூபாயும், வேட்பாளர்கள் சார்பில் பல கோடி ரூபாய் என, பட்டுவாடாவும் நடந்தது."அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தையா தருகின்றனர்... நம்மிடமிருந்து எடுத்த பணத்தைத் தானே திருப்பித் தருகின்றனர்...' என்ற எண்ணத்தை, பல அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் மக்கள் மனதில் விதைத்ததால், வேட்பாளர் கொடுத்த பணத்தை மறுக்காமல் வாங்கிக் கொண்ட மக்கள், பணத்துக்கு, "பட்டை நாமம்' போட்டுவிட்டு, தங்களின் விருப்பப்படியே ஓட்டுப் போட்டதன் மூலம், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்தை பணநாயகத்தால் ஜெயிக்க முடியும் என்ற எண்ணம், இந்த தேர்தல் மூலம் தவிடுபொடியாக்கப் பட்டுள்ளது.