சனி, 15 ஜனவரி, 2011

லேப் டாப் வாங்கும் முன்

கீழ்கண்ட பொருட்களில்
நீங்கள் எதை வாங்க விரும்புகிறீர்கள்?

ஃப்ளாட் டிவி
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்

லேட்டஸ்ட் மாடல் செல்போன்

லேப்டாப் கம்ப்யூட்டர்


இப்படி ஒரு கேள்வியை ஆயிரக்கணக்கானவர்களிடம் கேட்டு சர்வே செய்தது ஒரு ஏஜென்ஸி. இந்த சர்வேயில் பலரும் ‘டிக்’ அடித்து தேர்வு செய்தது லேப்டாப் கம்ப்யூட்டரைத்தான். மடியில் குழந்தை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக லேப்டாப் இருந்தாக வேண்டும் என்று நினைக்கிற நிலை இன்றைக்கு!நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அலுவலக வேலையைச் செய்து கொள்ளும் வசதி; மெயில்கள், மார்க்கெட்டின் லேட்டஸ்ட் ஏற்றயிறக்கங்கள், ரயில், விமானம் போன்றவை குறித்த தகவல்கள் என உங்களிடம் ஒரு லேப்டாப் இருந்தால் விரல் சொடுக்கும் நேரத்தில் அத்தனையும் செய்து முடித்துவிடலாம். இதனால்தான் எல்லோரும் அதை வாங்கத் துடிக்கிறார்கள்.

ஆனால், லேப்டாப் வாங்கும்போது என்னென்ன விஷயங்கள் பார்க்க வேண்டும், அதனை எவ்வாறெல்லாம் பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு உழைக்கும் என்கிற பல விஷயங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதை சொல்லத்தான் இதோ இந்தக் கட்டுரை.

இரண்டுவித லேப்டாப்!

லெனோவா, ஹெச்.பி., ஏசர், டெல் போன்ற முன்னணி பிராண்டட் நிறுவனங்கள் லேப்டாப்களை தயாரிக்கின்றன. முதலில் எந்த நிறுவனத்தின் லேப்டாப் வாங்கப் போகிறீர்கள்? அதற்கான பட்ஜெட் எவ்வளவு? உங்களுக்கு என்னென்ன அப்ளிகேஷன்கள் தேவை? என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள்.

இரண்டு வகையான லேப்டாப் கள் இருக்கிறது. ஒன்று, கமர்ஷியல் லேப்டாப்; இன்னொன்று, கன்ஸ்யூமர் லேப்டாப். அதிக பயன்பாடுகள் வேண்டும் என்பவர்கள் கமர்ஷியல் லேப்டாப் வாங்குவது நல்லது. குறைந்த பயன்பாடுகள், தவிர குறைந்த நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த நினைப்பவர்கள் கன்ஸ்யூமர் லேப்டாப் வாங்கலாம்.

கன்ஸ்யூமர் லேப்டாப்பில் இன்ஸ்பிரேஷன், ஸ்டூடியோ, வெப் கேமிரா போன்ற அம்சங்கள் இருக்கிறது. நான்கு மணி நேரத்திற்கு இதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஃபேன்ஸியாகவும் இருக்கும். இல்லத்தரசிகள், படிக்கும் குழந்தைகள், வீட்டிலிருந்தபடி பங்குச் சந்தை முதலீடு செய்பவர்கள் போன்றோர்களுக்கு கன்ஸ்யூமர் லேப்டாப் மிகச் சரியானது.

கமர்ஷியல் லேப்டாப்களை பத்து மணி நேரம் வரை பயன்படுத்தலாம். அதிகம் சூடாகாது. மிக வேகமாகவும், அதே நேரத்தில் நாம் அதில் பதிந்து வைக்கும் டேட்டாக்கள் பாதுகாப்பாகவும் இருக்கும். அதிக ஸ்டோரேஜ், 4 ஜி.பி. ராம் என பல வசதிகள் இருக்கிற இந்த லேப்டாப் கல்லூரி மாணவர்கள் புராஜெக்ட் செய்ய, பிஸினஸ்மேன்கள் அதிக சாஃப்ட்வேர்களை டவுன்லோட் செய்யப் பயன்படும். அதிக வசதிகள் கொண்ட இது கன்ஸ்யூமர் லேப்டாப்பைவிட வெறும் 3,000 ரூபாய் அதிகமாகும்.

ஸ்கிரீன்!

மாணவர்கள், பிஸினஸ்மேன்கள் 14.1 இஞ்ச் ஸ்கிரீன் அளவு கொண்டதை வாங்கலாம். இதன் எடை குறைவாக அதாவது 1.9 கிலோதான் இருக்கும். வீட்டில் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் 15.6 இஞ்ச் ஸ்கிரீன் வாங்கலாம். இதன் எடை 2.25 கிலோ. ஆனால் இரண்டின் விலையும் ஒன்றுதான்.

பேட்டரி!

பேட்டரியைப் பொறுத்தவரை ‘நயன்செல்’ பேட்டரி கேட்டு வாங்கணும். இந்த பேட்டரியை பயன்படுத்தினால் ஆறு மணி நேரத்திற்கு சார்ஜ் இருக்கும். இதுவே ’சிக்ஸல்’ பேட்டரி எனில் நான்கு மணி நேரத்திற்கு சார்ஜ் இருக்கும். நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துவீர்களோ, அதற்கு தகுந்த மாதிரி பேட்டரியே உங்கள் லேப்டாப்புக்குத் தேவை.

வாரன்டி காலம்!

அனைத்து நிறுவனங்களும் லேப்டாப்களுக்கு ஒரு வருட வாரன்டி காலம் கொடுக்கின்றன. கமர்ஷியல் லேப்டாப் எனில் மூன்று வருடம் வரைகூட வாரன்டி கொடுக்கிறார்கள். அதற்கு மேலும் கூடுதலாக வாரன்டி தேவைப்பட்டால் அந்த நிறுவனத்திடம் கேட்டுப் பெறலாம். டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்தக் கூடுதல் வாரன்டியை நீங்கள் ஆன்லைன் மூலமாகத்தான் பெற முடியும். இதற்கு 5,000 கட்ட வேண்டியது இருக்குமாம். லெனோவா, ஹெச்.பி. போன்ற நிறுவனங்களில் பணமாகக் கொடுத்தால் பத்து நாட்களில் கூடுதல் வாரன்டி கிடைக்கும்.

சர்வீஸ்!

லேப்டாப்களைப் பொறுத்தவரை ‘ஆன்சைட் வாரன்டி’ மற்றும் ‘கேரியிங் வாரன்டி’ என இரண்டு விதமான சர்வீஸ்கள் உண்டு. ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போல் அல்லாமல் லேப்டாப் என்பது கையில் தூக்கிக் கொண்டு செல்லக் கூடிய பொருள் என்பதால்தான் இப்படி இரண்டு விதமான சர்வீஸ்கள். ‘ஆன்சைட்’ என்பது சர்வீஸ் ஆட்கள் வீட்டிற்கே வந்து ரிப்பேர் சரி செய்வார்கள். ‘கேரியிங்’ என்பது நாம் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று அங்கு ரிப்பேரை சரி செய்து கொள்வது.

‘கேரியிங் வாரன்டி’க்கு சுமார் 4,000 ரூபாயும், ‘ஆன்சைட் வாரன்டி’க்கு 6,000 ரூபாயும் கட்டணம் சொல்கிறார்கள். உங்கள் சௌகரியத்துக்கு ஏற்ற மாதிரி வாங்கலாம்.

விலை!

‑ நோட் புக் மாடல் – இதை ஹேண்ட்பேக்கில்கூட வைத்துக் கொண்டு போகலாம். இன்டர்நெட், எம்.எஸ்.ஆபீஸ். போன்ற சில வசதிகள் மட்டும் கிடைக்கும் இந்த பேஸிக் மாடலின் விலை 16,500. பயணத்தின் போது பயன்படுத்த இது மிகச் சிறந்தது.

கேம்ஸ் ஆப்ஷன், கிராஃபிக் ஆப்ஷன், வெப் கேமிரா போன்ற வசதிகளுடன் இருக்கும் மாடல் வீட்டில் இருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றது. இதன் விலை 35,000 முதல் 40,000 வரை கிடைக்கிறது.

மல்டி மீடியா ஐ5, ஐ7 போன்ற வசதிகளுடன் வீடியோ எடிட்டிங் செய்யும் தொழில்நுட்பம் வரை இருக்கும் இதன் செயல்பாடு மிக வேகமாகயிருக்கும். இதன் விலை 41,000 முதல் 60,000 வரை.

உதிரிப் பாகங்கள்!

பொதுவாக லேப்டாப் வாங்கும்போது பேக், சார்ஜர், பேட்டரி போன்றவைகளை கண்டிப்பாகக் கொடுப்பார்கள். இது போக கூடுதல் உதிரிப் பாகங்கள் தேவைப்பட்டால் அதை நாம்தான் வாங்கிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்தும்போது அதிகமான வெப்பம் வெளியேறும். இது உடலுக்கு நல்லதல்ல. இதனைத் தவிர்க்க ‘கூலிங் பேட்’ வாங்கிக் கொள்வது நல்லது. இதன் விலை சுமார் 1,550.

உங்களின் லேப்டாப் இன்டர்னல் செக்யூரிட்டிக்காக ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேரை பொறுத்திக் கொள்வது நல்லது. மெக்காஃபே, கேஸ்பர்ஸ்கை, நார்டன் போன்ற ஆன்டிவைரஸ் விலை 500. இது ஒரு வருடத்திற்கானது. வயர்லெஸ் மவுஸ் 850 முதல் 1,000 வரை கிடைக்கிறது. பவர்பாயின்ட் 2,800.

இன்றைய காலகட்டத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டு பல வேலைகளைச் செய்ய லேப்டாப் அவசியம். அதை வாங்கும் போது மேற்சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், பிற்பாடு வருத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது.


இத்துடன் ஒரிஜினல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்குவது சாலச் சிறந்தது. ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை மட்டுமே கூடுதலாக செலவாகும் (ஹோம் பேசிக் ). மற்றபடி, ஒரிஜினல் ஓ எஸ் பயன்படுத்துவதன் மூலம், தேவையில்லாத வைரஸ் தாக்குதல், டேட்டா லாஸ் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்
.(நன்றி.அஜிஸ்பிளாக்)

வியாழன், 13 ஜனவரி, 2011

மனம் விட்டு பேசுங்கள்

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.

என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான். விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?”

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை”

வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் அப்பா?”

“தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்”

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். “இதோ என் அப்பா”

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். (நன்றி.அஜிஸ் அஹ்மத் ப்ளாக்)

வெள்ளி, 7 ஜனவரி, 2011

சிலந்தியின் அதிசயங்கள்


சிலந்திகளைப் பார்த்திருக்காத சுட்டிகளே இருக்க முடியாது. உங்கள் வீடுகளை நூலாம் படைகளின் கூடாரமாக்கும் சிலந்திகளும் உண்டு. கடித்து உயிரையே பறித்துவிடும் சிலந்திகளும் உண்டு. சிலந்திகளிலும் ஆயிரம் வகை!

வீட்டுச் சிலந்தி

வீட்டுச் சிலந்திகள் இருள் அடைந்த இடங்களை அதிகம் விரும்பும். வீட்டுக் கூரையிலோ, ஜன்னல் பக்கமோ வலை கட்டும். நிறைய பூச்சிகளைப் பிடிக்க முடியும் என்பதால் இந்த இடங்களை தேர்ந்தெடுக்கிறது.

வலையைக் கட்டி முடித்ததும் ஓர் ஓரமாக அமர்ந்து பூச்சிகள் வருவதற்காகக் காத்திருக்கும்.

பெரிய பூச்சிகள் மாட்டினால் அவற்றின் மேல் அதிக அளவு நூலைப்போட்டு பிடித்துக்கொள்ளும்.

பிளாக் விடோ

கறுப்புக் கண்ணாடி போல் உடலுள்ள சிலந்தி இது. ஆண் சிலந்திக்கும் பெண் சிலந்திக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. பெண் சிலந்திகள் ஆண் சிலந்திகளை விடச் சற்றுப் பெரியவை.

பெண் சிலந்திகளின் வயிற்றுப்பகுதியில் ஒரு சிவப்பு வட்டம் இருக்கும். ஆண் சிலந்திகளுக்கு இருபுறமும் சிவப்பு மற்றும் வெள்ளையில் கோடுகள் காணப்படும்.

பொதுவாக இவை தனிமை விரும்பிகள். வலையில் சின்ன அதிர்வு ஏற்பட்டாலும் ஓரமாக பதுங்கிக்கொள்ளும். இந்த வகை சிலந்திகளின் கடி விஷமுள்ளது. ஆனால், ஆரோக்கியமானவர்களை ஒன்றும் செய்யாது. பெண் சிலந்திதான் கடிக்கும். ஆண் கடிக்காது.

தோட்டச் சிலந்தி

தோட்டங்களிலும் புல்வெளிகளிலும் வாழும். கறுப்பு மற்றும் மஞ்சள் கோடுகளுடன் காணப்படும்.

நடுப்பகுதியில் சற்று அதிக வலிமையாக இருக்கும்படி வலை கட்டும். அந்த இடத்தில் பெண் சிலந்தி அமர்ந்து கொள்ளும். ஆண் சிலந்தி பெண் சிலந்தியைச் சுற்றி வலையை மேலும் பெரிதாக்கிக்கொண்டே போகும்.

தங்கக்கம்பி சிலந்தி

இதைப் ‘பூச்சிலந்தி’ என்றும் சொல்வார்கள். மஞ்சள் உடலில் சிவப்பு தீற்றல்கள் இருக்கும். கண்களுக்கு இடையேயும் சிவப்பு வண்ணம் காணப்படும். இவை புல்வெளி, வயல், தோட்டங்களில் வெள்ளை, மஞ்சள் மலர்களின் மேல் மலர்ந்திருக்கும்.

இவை பெரிய மலர்களின் ஓரத்தில் அமர்ந்திருக்கும். பூவிலுள்ள தேனைக் குடிக்க பூச்சிகள் வந்ததும் பிடித்து அவற்றின் உடலுக்குள் விஷத்தை ஏற்றும். இந்த விஷம் பூச்சியின் உடலில் உள்ள பாகங்கள் அனைத்தையும் உருக்கி திரவமாக மாற்றும். அதன் பிறகு அந்த திரவத்தை அப்படியே உறிஞ்சிக் குடிக்கும்.

பச்சைச் சிலந்தி

இவை வயல்களிலும் காடுகளிலும் காணப்படும். புதர்களிலும் சின்னச் செடிகளிலும் கூட இருக்கும்.

வேகமாக ஓடக்கூடிய இச்சிலந்திகள் பூச்சிகளை பூனை போல் பதுங்கிச்சென்று பிடித்து உண்ணும்.

கரோலினா உல்ஃப் சிலந்தி

இவை வயல்களில் காணப்படும். தரையில் கிடக்கும் பூச்சிகளை இரவில் வேட்டையாடும்.

பாலைவனச் சிலந்தி

சிலந்திகளுள் மிகப்பெரியவை இவை. மணலுக்கடியில் புதைகுழிகள் கட்டி வாழும்.

இரவில் குழியின் வாசலருகே குட்டிப்பூச்சிகளுக்காக காத்திருந்து பிடிக்கும். மற்ற நேரங்களில் வெளியே வராது.

ஆண் சிலந்திகள் 10-11 ஆண்டுகள் வாழும். பெண் சிலந்திகள் 25 ஆண்டுகள் வரை வாழும்.(நன்றி்.சு.வி)

செவ்வாய், 4 ஜனவரி, 2011

ஊடகங்கள்

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?

சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008/09 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு
---------------------------------------------------------------------
ஊடகங்களின் நன்மையும் தீமையும்

பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.

அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.

மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்

உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.
நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.

ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.

வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.

ஊடகங்களின் பாரபட்சமான போக்கு

தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் 'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.

எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.

முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்'; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.

பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.

இதற்கான தீர்வு என்ன?

"நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை" இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்

முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

நாளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு

தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.

நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.

உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.

ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்

நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.

6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்

நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.

எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?

நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.

7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?

8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்

சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.

9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்

கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்

ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.

ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர்.
பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்

டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

13.மக்கள் சக்திப் போராட்டம்

நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.

சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.

14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்

ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.

நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.

இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.

சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.

நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.

வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.

பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார், இறைநேசன், வஹ்ஹாபி, ஜீஎன், இப்னுபஷீர், மரைக்காயர், அபூசாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்

மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.

இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.

16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு

பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.

இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.

சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக 'சத்தியமார்க்கம்' போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்

பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் - குறிப்பாக - பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

முடிவுரை

"உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.

மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.

நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.
இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்...

(நன்றி.தமிழ் முஸ்லிம் தாரகை)
குறிப்பு.இந்த கட்டுரையை எழுதிய மஸ்தூக்கா அவர்கள் இணைய தளத்தை எனக்கு இயக்க கற்று தந்த புலி என்பது குறிப்பிடதக்கது.......