சனி, 9 ஏப்ரல், 2011

இலவசமின்றிஆட்சியைபிடிக்கவழி

election 2011 இலவசங்கள் கொடுக்காமல் ஆட்சியை பிடிக்க வழி
A+ A-

மானியங்கள் உதவியுடன் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் உண்மையில் பயன் உள்ளதா என் கேள்வி எழுந்துள்ளது. 2008 - 09 நிதியாண்டு பட்ஜெட்டில் 18 ஆயிரத்து 956 கோடி ரூபாயை நலத்திட்டங்களுக்கு செலவு செய்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது ஆண்டு மொத்த வருவாயில் 35 சதவீதம். நடப்பாண்டு பட்ஜெட்டில் மூலதன செலவிற்காக 9 ஆயிரத்து 140 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இது மொத்த வருவாயில் 17 சதவீதம். இதே போன்ற திட்டங்களுக்கு 2009 - 10 நிதி ஆண்டில் 20 ஆயிரத்து 55 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது இந்த ஆண்டு வரவில் 37 சதவீதம். இதில் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சலுகைகளாக வழங்கப்பட்டுள்ளன.


* இலவச மின்சார மானியம் - ரூ.295 கோடி
* அரசு காப்பீட்டு மானியம் - ரூ.750 கோடி
* இலவச கலர் "டிவி' வழங்குதல் - ரூ.500 கோடி
* பொது வினியோக உணவு மானியம் - ரூ.3,750 கோடி
* வீட்டு வசதி - குடிசை மாற்று வாரியம் - ரூ.1,800 கோடி
* சமத்துவபுரம் - ரூ.75 கோடி
* வீடு கட்ட மானியம் - ரூ.262 கோடி
* இலவச காஸ் அடுப்பு திட்டம் ரூ.140 கோடி
* வேலையில்லாதோர் இலவச மானியம் - ரூ.60 கோடி
மொத்த மானியம் - ரூ.7,632 கோடி


மொத்த வருவாயில் 14 சதவீதம் இலவச திட்டங்களுக்கு மானியமாக ஒதுக்க பட்டுள்ளது. இதற்கு மேல் அரசு வாங்கிய கடன்களுக்கு வட்டி மூலம் 6 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. மொத்த நிதி பற்றாக்குறையான 12 ஆயிரத்து 860.45 கோடியில் மூலதன ஒதுக்கீடுக்கான செலவு 8 ஆயிரத்து 609.12 கோடியை கழித்தாலும், நிதி பற்றாக்குறை மட்டுமே 5 ஆயிரத்து 19.54 கோடி ரூபாய் இருக்கும். மொத்த இலவச மானியங்களுக்கு ஒதுக்கப்பட்ட 7 ஆயிரத்து 632 கோடி ரூபாயை தவிர்த்து பார்த்தால், அரசுக்கு உபரி நிதியே கிடைக்கக் கூடும். இதை வைத்தே இந்த மானியங்கள் பயனுள்ள திட்டங்களா இல்லையா என்பதை அறியலாம்.


இலவச "டிவி' திட்டம், மக்கள் வேலை செய்யும் காலத்தை குறைக்கிறதே தவிர, திறமையை வெளிக்காட்ட வழி செய்யவில்லை. சில கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமே பயன் அடைகின்றனர். இதற்கான மின் தேவையும் அதிகரிக்கும். இலவச காப்பீட்டு திட்டத்தின் மூலம் 165 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை மக்கள் பெற்றனர். ஆனால் அரசு 750 கோடி ரூபாய் பிரிமிய தொகை செலுத்த நிதி ஒதுக்கி உள்ளது. அதாவது நான்கரை மடங்கு அதிக பிரிமியம் செலுத்தி இத்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதனால் காப்பீட்டு நிறுவனத்துக்கு தான் வருமானம். இதற்கு பதில் பொது மருத்துவமனைகளை விரிவுபடுத்தி எல்லா வகையான உயர் சிகிச்சை வசதிகளையும் நிரந்தரமாக கிடைக்கச் செய்யலாம்.


வேலை இல்லாதவர்களுக்கு உதவி தொகை மானியம் என்று 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் வேலைக்கு போக முயற்சிக்காமல், கையெழுத்திட்டு பணம் பெறும் சோம்பேறித்தனம் உருவாகி விட்டது. நியாய விலைக் கடைகள் மூலம் ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைப்பதால் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போகும். இதனால் நாட்டின் உற்பத்தி பாதிக்கும். தற்போதைய நிலையில் சாதாரண வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே கடினமாக உள்ளது. எப்படியும் வேலையை முடிக்க வேண்டும் என்போர் கூடுதலாக கூலியை கொடுத்து முடிக்க முற்படுவர். இதனால் மேலும் பொருட்கள் விலை கூடும். இப்படி, மானியத்தை கொடுக்கும் கொள்கைகளை விட்டு, அடிப்படை தேவைகளான, குடிநீர், மருத்துவம், போக்குவரத்து, சாலை, மின் உற்பத்தி போன்ற அத்தியாவசிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்தால், இலவசங்கள் கொடுக்காமலே அந்த அரசு ஆட்சியை பிடிக்க முடியும். கட்சிகள் சிந்திக்க வேண்டும். வரும் காலங்களில் அரசுகள் அவ்வாறு அமைந்தால், மக்கள் புண்ணியம் செய்தவர்கள்.thankyoudinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக