வெள்ளி, 9 ஜூலை, 2010

தொழுகை

தொழுகைஅப்துல் அஜீஸ் என்பவர் எகிப்தின் ஆளுநராக இருந்தார். இவருடைய அன்பு மகனின் பெயர் உமர். (இவர்தாம் பின்னாளில் ‘உமர் இப்னு அப்துல் அஜீஸ்’ என்று புகழ்பெற்ற ஆட்சியாளராக இஸ்லாமிய வரலாற்றில் ஜொலித்தார்) தம்முடைய மகன் உமரை உயர்கல்விக்காக மதீனா அனுப்பி வைத்தார் அப்துல் அஜீஸ்.

மதீனா மாநகரில் அச்சமயத்தில் ஸாலிஹ் பின் கைஸான் எனும் புகழ்பெற்ற மாமேதை வாழ்ந்து வந்தார். அவரிடம் தம் மகனை அழைத்துச் சென்று, ‘‘ஆசிரியர் அவர்களே, இவன் என் மகன் உமர். இவனை உங்கள் பொறுப்பில் விடுகிறேன். மார்க்க அறிவிலும், ஒழுக்கத்திலும், கல்வி கேள்விகளிலும் இவனைச் சான்றோன் ஆக்குவது உங்கள் கடமை’’ என்று பணிவுடன் கூறித் தம் மகனை அந்த மாமேதையிடம் ஒப்படைத்தார்.

கல்வி போதனையும் நல்லொழுக்கப் பயிற்சியும் நாள்தோறும் நடைபெற்று வந்தன. ஒருமுறை மாணவர் உமர் தொழுகைக்குச் சற்று தாமதமாக வந்தார். ஆசிரியர் இறையச்சமும் கண்டிப்பும் மிகுந்தவர். எனவே உமரை அழைத்து, ‘‘நீ இன்று தொழுகைக்குத் தாமதமாக வந்ததற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டார்.

‘‘முடியலங்காரம் செய்து கொண்டிருந்தேன்; அதனால் சற்றுத் தாமதம் ஆகிவிட்டது’’ என்றார் உமர்.
‘‘ஓஹோ, தொழுகைக்குத் தாமதமாக வரும் அளவுக்கு முடியலங்காரம் முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ?’’ என்று கடிந்துகொண்ட ஆசிரியர், ‘இனி இவ்வாறு தாமதமாக வரக்கூடாது’ என்று எச்சரித்து மாணவரை மன்னித்து அனுப்பிவிட்டார்.

இந்தச் செய்தி எகிப்தின் ஆளுநரான தந்தை அப்துல் அஜீஸுக்கு எட்டியது. உடனே தம் ஆஸ்தான நாவிதரை அழைத்தார். ‘‘நீங்கள் இப்பொழுதே மதீனாவுக்குச் செல்லுங்கள். அங்கு என் மகன் உமர் படித்துக் கொண்டிருக்கிறான். முதல் வேலையாக அவன் தலையை மொட்டையடித்துவிட்டு வாருங்கள்’’ என்று ஆணையிட்டு அனுப்பி வைத்தார்.

நாவிதரும் மதீனா சென்று அவ்வாறே செய்தார். உமையாக்கள் என்று வரலாறு குறிப்பிடும் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்தான் இளவரசர் உமர். ஆயினும் தொழுகைக்குத் தாமதமாக வருவதை அவருடைய தந்தை விரும்பவில்லை.

அந்த அளவுக்குக் கண்டிப்புடனும் கண்காணிப்புடனும் வளர்க்கப்பட்டதால்தான் பின்னாளில் ‘உமர் இப்னு அப்துல் அஜீஸ்’ எனும் மாபெரும் ஆட்சியாளராய் இவர் புகழ்பெற முடிந்தது.

இந்த வாரப் பிரார்த்தனை

‘இறைவா! நான் உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், பரிசுத்த தன்மையையும், போதுமென்ற மனத்தையும் கோருகிறேன்

1 கருத்து:

  1. தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நல்ல கட்டுரை. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு